க.பொ.த. சா/த பரீட்சை திகதி அறிவிப்பு...!



2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர, இந்த ஆண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வழங்குவதற்காக தபால் துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களது சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும், தனியார் மாணவர்களின் அனுமதி அட்டைகள் அவர்களது வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் செய்யலாம்.

மேலும், அனைத்துப் பாடசாலை அதிபர்களும், பரீட்சார்த்திகளுக்கு விரைவில் அனுமதி அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டார்.

இன்னும் அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை மாணவர்கள், தங்கள் பாடசாலை அதிபர்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திடம் விசாரித்துத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், தனியார் பரீட்சார்த்திகள் இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்திடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post