ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் விஜித பொறுப்புக்கூறல் குறித்து பேசாமையால் ஏமாற்றம் ; சத்தியலிங்கம் எம்பி தெரிவிப்பு

 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க உருவாக்கத்தை ஜெனிவா வலியுறுத்துகிறது. ஆனால் ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொறுப்புக்கூறல் பற்றி பேசவில்லை. இது எமக்கு பாரிய ஏமாற்றமளிக்கிறது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  பா. சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  சனிக்கிழமை (01)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். திட்டமிட்ட குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை  முன்னெடுப்பதற்கும் இந்த சட்டம்  பயன்படுத்தப்படும், புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தில் பல ஆண்டுகாலமாக  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி பேசியிருந்தோம்.ஒருசிலர் தண்டனை காலத்துக்கு மேலதிகமாகவே சிறையில் உள்ளார்கள்.

அவர்களை பிணையிலாவது விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆகவே அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது ஆளும் தரப்பின் இரண்டு உறுப்பினர்கள் அன்று அச்சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்கள். ஆகவே  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் என்ன செய்யும் என்பதை அவதானித்து வருகிறோம்.நல்லிணக்கம் மனமாற்றத்துடன் ஏற்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்தவுடன் தேசிய நல்லிணக்கம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இராணுவத்தினர் எமது வீடுகளுக்கு வந்தார்கள். தேசிய கொடியை வீட்டின் முன் கட்டுமாறு பலவந்தமாக குறிப்பிட்டார்கள். அதனையே அன்று தேசிய நல்லிணக்கமாக கருதினார்கள்.

இது நல்லிணக்கத்துக்கு மாறாக எமது மனங்களில் வெறுப்புக்களை ஏற்படுத்தும். ஆகவே தேசிய நல்லிணக்கத்துக்கான விடயங்களை அரசாங்கம் அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டும். காணாமல் போனோர்  தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும்  நல்லிணக்க உருவாக்க செயற்பாட்டுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வளவு  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த முடியும்.

காணாமல் போனோர் அலுவலகம்  மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே  மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வகையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள்  வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க உருவாக்கத்தை ஜெனிவா வலியுறுத்துகிறது. ஆனால் ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொறுப்புக்கூறல் பற்றி பேசவில்லை. இது எமக்கு பாரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை  உறுதிப்படுத்த வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் (காலஞ்சென்ற) மங்கள சமரவீர  பொறுப்புக்கூறல் மற்றும்  தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் செயற்பட்டார்.

இந்த நாட்டில் மொழிக்கொள்கை   முறையாக செயற்படுத்தப்படவில்லை. குறிப்பாக  இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்துகளின் பெயர் பலகைகளில்  தமிழ் மொழியில்  பிiழையான வடிவங்கள் இருப்பதை காணலாம். கண்டி பேருந்தில் ‘க’ என்ற எழுத்துக்கு பதிலாக தவறான எழுத்து  போடப்பட்டிருக்கும். நல்லிணக்கத்தின் முதல்படியாக  மொழிக் கொள்கையை அமுல்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் போனோரின் உறவுகள் பல நாட்களாக இன்றும் வீதியில் இருந்து தமது உறவுகளுக்காக போராடுகிறார்கள். ஆகவே இவர்களின்  கோரிக்கை குறித்து நீதியமைச்சர்  கரிசனை கொள்ளவேண்டும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post