அண்மைக்கால பொருளாதார மேம்பாடு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாத காலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாகப் பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன.
அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
அதுமாத்திரமன்றி 'இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது' எனத் தெரிவித்திருந்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்' எனவும் அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று புதன்கிழமை நாட்டுக்கு வருகைதரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) வரை நாட்டில் தங்கியிருப்பர்.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பொருளாதார நிபுணர் குழுவினரையும் சந்திக்கவிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், சமகால பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
Post a Comment