தமிழ்நாடு அரசுத்துறை ஆலோசனைக் கூட்டங்களிலும், தமிழ்நாடு அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, அதில் சில சொற்கள் விடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் அது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “தமிழ்த்தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு அவர்கள் பாடிய சில சொற்கள் கேட்காமல் போனது. அதனால், உடனடியாக மீண்டும் அவர்களை தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வைத்தோமே தவிர அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல” என விளக்கம் அளித்தார்.
முன்னதாக ஆளுநர் பங்கேற்ற சென்னை டிடி பொன்விழா மற்றும் இந்தி மாதம் நிறைவு நிறைவு விழாவில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ எனும் வரி மட்டும் விடுபட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையானது. அப்போது இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் இருந்தும், டிடி தரப்பில் இருந்தும் அது கவனக்குறைவால் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக சர்சையாகி அதற்கு உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “தமிழை அவதூறு செய்ததற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து முறையின்றி பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ‘திராவிடம், திராவிடம்’ என்று சொல்லி திட்டமிட்ட ரீதியில் தமிழை அழிக்க துடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது. ‘என் இனிய தமிழ் மொழியை’ அதிகாரத்தை கொண்டு அழித்து விடலாம் என நினைத்தால் அதை எதிர் கொண்டு தமிழ் மொழியை காப்போம். ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கும் இவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் புகழை மறைக்க ‘புகழ்’ என்ற சொல்லை நீக்கி ‘திகழ்’ என்று பாட வைத்திருப்பதும், திராவிட நல் திருநாடும் என்பதில் ‘திருநாடும்’ என்ற சொல்லையும் நீக்க வைத்து தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி விட்டனர்.
Post a Comment