ஜேர்மனியில் திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 20,000-லிருந்து 90,000-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜேர்மானிய வியாபார கூட்டத்தில் (Asia-Pacific Conference of German Business 2024) உரையாற்றும் போது மோடி இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஜேர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ், "நமது பல்கலைக்கழகங்களில் இந்தியர்கள் தற்போது மிகப்பாரிய வெளிநாட்டு மாணவர் குழுவாக உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், 23,000 இந்தியர்கள் ஜேர்மனியில் வேலை பெற தகுதி பெற்றனர்," என்று கூறினார்.
மேலும், விசா செயல்முறைகளை வேகமாகும் வகையில் டிஜிட்டல்மயமாக்கி மேம்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனாலும், ஜேர்மனி சட்டவிரோத குடிவரவு குறைக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருவதாக சான்சலர் கூறினார்.
"திறமையான தொழிலாளர்களுக்கு ஜேர்மனி திறந்ததாக இருப்பினும், எவருக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்பதை நாங்களே முடிவுசெய்வோம்," என்று கூறியுள்ளார்.
மேலும் மோடி பேசுகையில், IIT Chennai மற்றும் ஜேர்மனியின் ட்ரெஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் அறிவித்தார்.
"மக்களிடையே உள்ள தொடர்புகள் இந்தியா-ஜேர்மனி உறவின் முக்கிய தூணாக உள்ளன," என்று கூறினார் மோடி.
Post a Comment