டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். சுமார் 155 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றி போது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், தேர்தலை சந்திக்கப்போவதாகவும் கூறியிருந்த கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்றத்தை கலைக்கப்போவதாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தற்போது டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியின் புதிய அமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார்.
மேலும் டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை ராஜினாமா செய்கிறார். ஆளுநரை மாலை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கும் கெஜ்ரிவால், சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வான விவரத்தையும் அளிப்பார் என கூறப்படுகிறது. மேலும், டெல்லி சட்டமன்றம் செப்.26 மற்றும் 27ம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Post a Comment