காசாவில் இரண்டாவது கட்டமாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தெற்கில் உள்ள மருத்துவ மையங்களில் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து போர் நீடிப்பதோடு இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் நேற்று தெற்கு காசாவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையொட்டி மருத்துவ மையங்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுதிரண்டனர்.
இந்தத் திட்டதின் கீழ் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 187,000இற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து வழங்குவதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இணங்கின.
எனினும் காசாவில் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள் அடைக்கலம் பெற்று கூடாரம் அமைத்திருந்தவர்களே கொல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் தெற்கு காசாவின் ரபா நகருக்கு அருகில் இருக்கும் மொஸ்பாஹ் சுற்றுப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. ஆளில்லா விமானத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்கள் 11ஆவது மாதத்தை தொடவிருக்கும் நிலையில் இதுவரை அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41,000ஐ நெருங்கியுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை முன்வைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. எதிர்வரும் நாட்களில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று இரு அமெரிக்க அதிகாரிகள், இரு எகிப்து பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பல மாதங்களாக நீடிக்கும் இழுபறிக்குக் காரணமான விடயங்களை தளர்த்தும் நோக்கிலேயே இந்த முன்மொழிவு கொண்டுவரப்படவுள்ளது.
ஹமாஸ் ஒழிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருகிறார். மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒரு உடன்படிக்கையிலும் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வாபஸ் பெறுவது உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஹமாஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பேச்சுவார்த்தையில் இருந்து நெதன்யாகும் வேண்டுமென்றே வெளியேறுவதாகவும் அதன்மூலம் எமது மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் ஆக்கரமிப்பை தொடர முடியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
காசா மற்றும் எகிப்து எல்லைப் பகுதியான பிலடெல்பியா தாழ்வாரத்தின் கட்டுப்பாட்டை நெதன்யாகு கேட்பது இதன் ஒரு தந்திரம் என்றும் ஹமாஸ் குறிப்பிட்டது.
பிலடெல்பியா தாழ்வாரத்தில் இஸ்ரேலிய படை தொடர்ந்து நிலைகொள்வதில் நெதன்யாகு உறுதியாக இருப்பது தற்போதைய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படையின் சுற்றிவளைப்புகள் மற்றும் முற்றுகைகள் ஒரு வாரத்தைத் தாண்டி நேற்றுடன் (05) எட்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
டுபாஸின் தெற்கே உள்ள பாரா அகதி முகாமில் 16 வயது சிறுவனை இஸ்ரேலியப் படை கடந்த புதனன்று (04) சுட்டுக்கொன்றது. இதன்போது அபூ சீனா என்ற சிறுவன் மீது பல தடவைகள் சூடு நடத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அம்புலன்ஸ் வண்டி அவனை அடைவதையும் தடுத்தருப்பதோடு இராணுவ புல்டோசரை பயன்படுத்தி சிறுவனின் உடலை அகற்றியதாக வபா செய்தி நிறுவனம் கூறியது.
டுபாஸ் நகரில் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மேலும் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாகனத்தில் இருந்த ஐந்து சடலங்களையும் மீட்டதாகவும் காயமடைந்த ஆறாமவருக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்ததாகவும் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனின் நகரில் இஸ்ரேலின் முற்றுகை எட்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்ததோடு அங்கு சுற்றுவளைப்புகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேலியப் படை பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் பலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதோடு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்டு நாட்களாக வீட்டுக்குள்ளேய அடங்கிக் கிடப்பதாக அங்குள்ள அதனன் நக்னகியா என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சிறைச்சாலை போல் உள்ளது என்று ஐந்து குழந்தைகளின் தந்தையான 56 வயதான அதனன் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொண்டபோதும் தற்போதைய படை நடவடிக்கை கடுமையாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெனின் நகரின் வீதிகள், உட்கட்டமைப்புகள் மற்றும் உடைமைகளை இஸ்ரேலியப் படை புல்டோசர் கொண்டு தகர்த்து வருகிறது.
மேற்குக் கரையின் வடக்கு பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேலின் படை நடவடிக்கையில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட சிலர் பலஸ்தீன போராளிகள் என்று அந்த போராட்டக் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
Post a Comment