எட்டாண்டு மின்னுற்பத்தி திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை அங்கீகாரம்...!


எட்டு ஆண்டுகளில் 12 ஆயிரத்து 461 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட உள்ள 31 ஆயிரத்து 350 மெகாவார்ட் நீர்மின்னுற்பத்தி திட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய மின்சக்தி அமைச்சின் இத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘இந்த புதிய நீர்மின்னுற்பத்தி திட்டம் இந்தியாவின் பின்தங்கிய பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு துணைபுரியும். நீர் மின்னுற்பத்தி துறையின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகவும் முதலீடுகள் அதிகரிக்கவும் வழிவகுக்கும்’ என்றுள்ளார்.

இதேவேளை மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இத்திட்டம் 2024 முதல் 2032 வரை செயற்படுத்தப்படும். இதன் ஊடாக நீர்மின் திட்டங்களில் துரித முன்னேற்றமும் பின்தங்கிய மற்றும் மலைப்பாங்கான இடங்களின் உட்கட்டமைப்பும் போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட துறைகளும் துரிதமாக மேம்பாடு அடையும். இதன் பயனாக உள்ளூர் மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இது நீர் மின் துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் புதிய திட்டங்களை உரிய நேரகாலத்தில் நிறைவுறுத்தவும் வழிவகை செய்யும்.

பின்தங்கிய பிரதேசங்களிலும் மலைப்பாங்கான பகுதிகளிலும் நீர்மின்னுற்பத்தி முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post