“எங்களின் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது” - சூரி...!


சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இப்படத்தைக் கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்க சூரியோடு இணைந்து மலையாள நடிகை அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசியிருந்தனர். படத்தின் ட்ரைலரும் பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.

மேலும் பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் கமல்ஹாசன் பாராட்டு அமைந்தது. இந்த நிலையில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கத் திரையரங்கிற்கு வந்தார் சூரி. அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சூரி, “பல விருது வாங்கும் திரைப்படங்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேருவதில்லை. பொதுவாக எல்லா படங்களையும் மக்கள் பார்ப்பார்கள். கூடவே இது போன்ற படங்களையும் அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைக்கும். அதற்கான முயற்சி தான் கொட்டுக்காளி. எங்களின் முயற்சி வெற்றி பெற்றிருப்பதாக நம்புகிறேன்.” என்றார்.

Post a Comment

Previous Post Next Post