ஒருநாள் கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதிக்கான புதிய சாதனையை ஸ்கொட்லாந்தின் சார்ளி கெசெல் நிலைநாட்டியிருக்கின்றார்.

ஓமானுக்கு எதிராக டண்டீ, போர்ட்ஹில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சார்ளி கெசெல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 5.4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வீரர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

இதன் மூலம் தென் ஆபிரிக்க வீரர் கெகிசோ ரபடாவுக்கு 9 வருடங்களாக சொந்தமாக இருந்த சாதனையை சார்ளி கெசல் முறியடித்தார்.

பங்களாதேஷுக்கு எதிராக மிர்பூரில் 2015இல் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கெகிசோ ரபாடா 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமையே அறிமுக வீரருக்கான முந்தைய அதிசிறந்த பந்துவீச்சு சாதனையாக இருந்தது.

உபாதை காரணமாக கடந்த ஒருவருட காலமாக ஸ்கொட்லாந்து அணியில் இடமபிடிக்க முடியாமல் இருந்த சார்ளி கெசெல் அதிர்ஷ்டவசமாகவே அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கிறிஸ் சோல்அணியிலிருந்து விடுகை பெற்றதாலேயே ஸ்கொட்லாந்து குழாத்தில் கெசெல் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

கெசெல் தனது அறிமுகப் போட்டியில் முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் நான்காவது பந்தில் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.

தனது இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை கெசெல் வீழ்த்த, அந்த சந்தர்ப்பத்தில் அவரது பந்துவீச்சுப் பெறுதி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 1.3 ஓவர்களில் ஓட்டமின்றி 4 விக்கெட்கள் என இருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் 21.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் ப்ராத்திக் ஆதவேல் அதிகப்பட்சமாக 34 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 17.2 ஓவர்களில் 2 விககெட்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

ப்றெண்டன் மெக்முலன் 37 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்களைவிட ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே 23 ஓட்டங்களைப் பெற்றார்.

Post a Comment

Previous Post Next Post