புதுடெல்லி: நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாற்றாட்டம் உள்ளிட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திய யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அத்தேர்வை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று ரத்து செய்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் மேலும் வலுவடைந்துள்ளது. டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வீடு மற்றும் கல்வி அமைச்சகம் முன்பாக மாணவர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். நாட்டின் பல பகுதிகளிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நீட் முறைகேடு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வினாத்தாள் கசிவு தேசிய நெருக்கடி. பொருளாதார நெருக்கடி போல் கல்வி நெருக்கடி உருவாகி உள்ளது. இதற்கு காரணம் பாஜவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்சும் கல்வி நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்றியிருப்பதே. கல்வி நிறுவனங்களை அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத வரையிலும் வினாத்தாள் கசிவுகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
பாஜ, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஏற்கும் நபர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதுபோல, பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் நமது கல்வி அமைப்பை முற்றிலும் சீர்குலைத்துள்ளன. கஷ்டப்பட்டு, இரவு பகலாக படித்து நேர்மையாக தேர்வு எழுதும் மாணவர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர். பாஜ ஆட்சியில் மத்தியபிரதேசத்தில் வியாபம் ஊழல் நடந்தது. குஜராத், உபியில் பல்வேறு கல்வி முறைகேடுகள் நடந்துள்ளன.
இவற்றை இப்போது அவர்கள் நீட், நெட் தேர்வு மூலமாக நாடு முழுவதும் பரப்புகின்றனர். இதனால், மோடி அரசு மீதான நம்பகத்தன்மை முற்றிலும் ஜீரோவாகி உள்ளது. நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் செய்வதறியாமல் தவிக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடியைப் பொறுத்த வரையில் இப்போது அவரது ஒரே வேலை மக்களவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதுதான். அதை நோக்கி தான் காய் நகர்த்தி வருகிறார். நீட் பற்றியோ, லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியோ கவலைப்பட மாட்டார். வினாத்தாள் முறைகேடு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுப்போம்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர அரசுக்கு அழுத்தம் தருவோம். இவ்வாறு ராகுல் கூறினார். நீட் மற்றும் யுஜிசி-நெட் போன்ற தேர்வுகளை நடத்துவதில் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் திறமையின்மையை ஏற்க முடியாது என்றும், இதுதொடர்பாக ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘‘முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமை மோசடியானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது’’ என்றார்.
*போர்களை நிறுத்துபவரால் இதை செய்ய முடியவில்லை;
ராகுல் மேலும் பேசுகையில், ‘‘உக்ரைன்-ரஷ்யா மற்றும் காசா-இஸ்ரேல் போர்களை நிறுத்துவதாக கூறும் பிரதமர் மோடியால் வினாத்தாள் கசிவை தடுக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்குப் பிறகு பிரதமர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாக பலவீனமாகி விட்டார். அச்சத்தை உருவாக்கி மக்களை பயமுறுத்தி, யாரையும் பேசவிடாமல் ஆட்சி செய்த மோடியால் இப்போது மவுனமாக இருந்து ஆட்சி செய்ய முடியாமல் தவிக்கிறார். இப்போது மக்கள் அவரைப் பார்த்து பயப்படவில்லை’’ என்றார்.
* நீட் தேர்வு ரத்து இல்லை:
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து கூறியதாவது: அரிதாக நடக்கும் சம்பவங்களால், தேர்வில் சரியாக தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இதில், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உட்பட யார் தவறு செய்திருந்தாலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தேர்வு முகமையின் செயல்பாட்டை மறுஆய்வு செய்து மேம்படுத்துவதற்கான உயர்மட்டக் குழு விரைவில் அறிவிக்கப்படும். நமது தேர்வு அமைப்புகள் மீது நம்பிக்கை வைப்போம். எந்த முறைகேடுகளையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. இவ்வாறு கூறினார்.
* மோசடி இல்லாமல் தேர்வு நடத்த முடியாது:
காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘நாட்டில் கல்வி மற்றும் ஆள்சேர்ப்பு முறையை மோடி அரசு சீரழித்துள்ளது. நீட், யூஜிசி -நெட், கியூட் ஆகியவற்றின் வினாதாள் கசிவு, மோசடி மற்றும் மொத்த முறைகேடுகள் இப்போது அம்பலமாகியுள்ளன. ஆர்டிஐ தகவலின்படி பரிக்ஷா பே சர்ச்சாவிற்கான செலவு கடந்த 6 ஆண்டுகளில் 175 சதவீதம் அதிகரித்துள்ளது. முறைகேடு இல்லாமல் நாடு தழுவிய தேர்வை நடத்த முடியாத அரசு தேர்வு நேரத்தில் மட்டும் மாணவர்கள் மீது அறிவை பொழிவது என்பது நேர்மையற்ற செயல்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ வினாத்தாள் வெளியாவது மற்றும் மோசடிகள் இல்லாமல் ஒரு தேர்வை கூட மோடி அரசால் நடத்த முடியவில்லை. இந்தியாவின் கல்வி முறையை அரசு நாசமாக்கிவிட்டது. என்சிஇஆர்டி, யூஜிசி மற்றும் சிபிஎஸ்இ ஆகியவற்றின் தொழில்திறன் அழிக்கப்பட்டுவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்வு முறைகேடு சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நீட் தேர்வில் முறைகேடு நடந்தால் நேர்மையானவர்கள் மருத்துவர்களாக மாற மாட்டார்கள். அதேபோல யூஜிசி நெட் தேர்வு கல்வி முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜ ஆட்சியின் கீழ் வினாத்தாள் மாபியா ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு தேர்விலும் மோசடி செய்கிறது. இது நாட்டிற்கு எதிரான ஒருவரின் சதியாக இருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
* விரைவில் தேர்வு தேதி அறிவிப்பு
டெல்லியில் ஒன்றிய கல்வி துறை அமைச்சக இணை செயலாளர் கோவிந்த் ஜெய்ஷ்வால் அளித்த பேட்டியில், ‘‘நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை. தேர்வு தொடர்பாக ஏஜென்சிகளிடம் இருந்து பெற்ற தகவல்கள் தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. எனவே மாணவர்களின் நலனை பாதுகாப்பதற்காக தானாக முன்வந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நன்றி...
தினகரன் - இந்தியா
Post a Comment