தாய்வானை சுற்றி வளைத்த சீனா...!


தாய்வானில் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அந்நாட்டை சுற்றி வளைத்த சீன இராணுவம் நவீன ஆயுதங்களுடன் 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதனால், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஒருங்கிணைந்த சீனாவாக தாய்வான் இருந்து வந்த நிலையில், கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து தாய்வான் தீவில் மக்கள் குடியேறினர். தாய்வான் தனது நாட்டின் ஒரு அங்கம் என்றே கூறி வரும் சீனா தொடர்ந்து அந்நாட்டுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.
தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாலும் கடும் கோபத்தில் உள்ளது சீனா. இந்த நிலையில், தாய்வானை கடல் வழியாகவும் வான்வழியாகவும் முற்றுகையிட்டு தீவிர போர் பயிற்சியில் சீன இராணுவம் ஈடுபட்டுள்ளது. சீனா 2 நாட்கள் போர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக சீன இராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சீனாவின் மேற்கு திசையில் இருக்கிறது தாய்வான். அண்மையில், தாய்வான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் பதவியேற்று இருந்தார். தங்களை யாரும் அச்சுறுத்த முடியாது என்று தாய்வானின் புதிய ஜனாதிபதி வில்லியம் ராய் பேசியிருந்த நிலையில், இரண்டு நாள் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது சீனா.

தாய்வானின் கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் ஆகிய பகுதிகளிலும் சீன இராணுவத்தின் போர் கப்பல்களும் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. தாய்வான் நாட்டை சுற்றி போர் பயிற்சியை துவங்கியது குறித்து சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது;

“தற்போது நடைபெற்று வரும் போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு தண்டனையாக இருக்கும். தாய்வானின் அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் கோபமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான வார்னிங் ஆக இந்த போர் பயிற்சி அமையும்” என்று கூறினார்.

தனது இராணுவ பலத்தை காட்டும் விதமாக சீனா இந்த கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த போர் பயிற்சிக்கு Sword-2024A என பெயரிட்டுள்ளது.

தாய்வானின் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற மூன்றே நாட்களில் சீனா, அந்நாட்டை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது கிழக்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தாய்வானின் புதிய ஜனாதிபதியை பிரச்சினையை உருவாக்குபவர் என்றும் பிரிவினைவாதி என்றும் விமர்சிக்கும் சீனா, தங்கள் இலக்கை அடைய ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்ற ரீதியில் பேசியுள்ளது.

இதற்கிடையே, தாய்வானின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், சீனாவின் போர் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்வானின் இராணுவம் உச்ச கட்ட உஷார் நிலையில், வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இடையூறு விதிக்கும் செயல் எனவும் விமர்சித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post