நோன்பாளிக்கான ஒழுக்கங்கள்...!


நோன்பு நோற்ற ஒருவர் நோன்பின் நோக்கத்தை அடைய வேண்டுமாயின் தனது உடலுறுப்புக்களை பாவமான காரியங்களிலிருந்தும் வீண் விளையாட்டுக்களை விட்டும் பேணிப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாததாகும். இதனை பல நபிமொழிகள் எடுத்தியம்பியுள்ளன.

‘நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். அறிவீனமாக நடந்துகொள்ள வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று இரு முறை கூறட்டும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன்மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். (மேலும்) ”எனக்காகவே நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் ஆசையையும் கைவிடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ (என்று அல்லாஹ் கூறுகின்றான்) என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

மற்றுமோர் சந்தர்ப்பத்தில், நோன்பாளி நோன்பு நோற்றவேளை பொய் பேசுதல், தீய நடத்தையில் ஈடுபடுவதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள், ‘பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று’ என்றுள்ளார்கள். 
(ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

அதனால் எந்த இலட்சியத்தை அடைவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதோ அந்த இலட்சியத்தை மறந்து விடாது உறுதியோடு இருப்போம். நோன்பின் இலக்கை அடைய முயற்சிப்போம்

முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்

Post a Comment

Previous Post Next Post