உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்கள் மிகவும் சுவையானவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான சத்துக்களை உள்ளடக்கியவை. பழங்களுள் பல வகைகள் உள்ளன. அதில் மாதுளை என்று அழைக்கப்படும் மாதுளம் பழம், அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம்.
இப்படி விலைக் குறைவில் கிடைப்பதாலோ என்னவோ, நிறைய பேருக்கு இந்த பழத்தை குறைவாக எடை போடுகிறார்கள். அதாவது இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை குறைவாக மதிப்பிடுகிறார்கள். உண்மையிலேயே மாதுளம் பழம் அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்ற அற்புதமான பழம். இந்த பழத்தில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துளளன.
முக்கியமாக மாதுளம் பழம் ஆண்களுக்கு மிகவும் நல்லது. அதோடு கர்ப்பிணிப் பெண்களும் மாதுளம் பழத்தை சாப்பிடுவது வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் நல்லது. இப்போது இந்த மாதுளம் பழத்தை ஒரு வாரத்திற்கு தினமும் உட்கொண்டு வந்தால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைக் காண்போம்.
உள் வீக்கம் குறையும்
மாதுளம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பங்களிக்கும் உடலினுள் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. ஆய்வுகளில் கூட ஒரு வாரத்திற்கு தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட புனிகலஜின்ஸ் எனப்படும் சேர்மங்கள் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளன.
புற்றுநோய்
ஆய்வுகளின் படி, மாதுளம் பழத்தில் உள்ள பல்வேறு சேர்மங்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. எனவே தினமும் மாதுளம் பழத்தை உட்கொண்டு வருவதன் மூலம், உடலினுள் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி தடுக்கலாம். குறிப்பாக கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கலாம்.
இதய நோய் தடுக்கப்படும்
மாதுளம் பழத்தில் பாலிஃபீனோலின் கலவைகள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தினமும் மாதுளம் பழ ஜூஸை அல்லது மாதுளம் பழத்தை உட்கொண்டு வந்தால், நிலைமை மோசமாவது தடுக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியம் சிறப்பாக பராமரிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், மாதுளம் பழத்தை தினமும் உட்கொள்ளும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.
சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்
தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வருவது, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆய்வுகளின் படி, ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த பழத்தின் சாறு அல்லது இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மீண்டும் சிறுநீரக கற்கள் வருவது தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது. அதோடு மாதுளம் பழமானது இரத்தத்தில் ஆக்சலேட்டுகள், கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுகளின் அடர்த்தியை சீராக பராமரிக்க உதவி புரிவதன் மூலம், சிறுநீரக கற்களை உருவாவதைத் தடுக்கிறது.
செரிமான ஆரோக்கியம் மேம்படும்
மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள், குடல் நுண்ணுயிரியின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டில் இந்த நுண்ணுயிரிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆய்வுகளும் மாதுளம் பழமானது ப்ரீபயாடிக் விளைவுகளைக் கொண்டிருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் குடல் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதாக கூறுகின்றன.
பிற நன்மைகள்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் அல்லது இரண்டையும் குறைக்க இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் மாதுளை ஜூஸ் குடிப்பதை ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இருப்பினும், சர்க்கரை நோய் அல்லது சிறுநீரக பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தினமும் மாதுளையை உட்கொள்வது பற்றி மருத்துவரிடம் கேட்க வேண்டும். ஏனெனில் இந்த பழத்தில் சர்க்கரை மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன.
Post a Comment