பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை...!



பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.
குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன இலங்கை வெற்றி அடைவதற்கு உதவின.

குறிப்பாக தசுன் ஷானக்க கடைசி ஓவரை சிறப்பாக வீசி 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியமை அணியின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது அவிஷ்க பெர்னாண்டோ (4), 37 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் (19) ஆகிய இருவரும் களம் விட்டகழ இலங்கை ஆட்டம் கண்டது.

ஆனால், குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.

குசல் மெண்டிஸ் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் அணித் தலைவர் சரித் அசலன்கவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

சதீர சமரவிக்ரம 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 61 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 21 பந்தகளில் 6 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 8.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், 17 மாதங்களின் பின்னர் ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட மஹ்முதுல்லாவும் தனது 5ஆவது ரி20 போட்டியில் விளையாடும் ஜாக்கர் அலியும் 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

மஹ்முதுல்லா 31 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர் ஆட்டம் இழந்தபின்னர் ஜாக்கர் அலி, மஹேதி ஹசன் (16) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர். (180 - 6 விக்.)கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் பங்களாதேஷுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார்.

ஆனால் அவர் பந்துவீச்சு எல்லையில் இருந்ததால் இலங்கைக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
கடைசி ஓவரை வீசிய தசுன் ஷானக்க முதல் பந்தில் ரிஷாத் ஹொசெய்னின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆனால், தசுன் ஷானக்கவின் அடுத்த பந்து வைடானது. 2ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை ஷானக்க கொடுக்க, ஜாக்கர் அலி துடுப்பாட்ட எல்லைக்கு வந்தார். ஆனால், அவரது விக்கெட்டை அடுத்த பந்தில் தசுன் ஷானக்க கைப்பற்றினார். ஜாக்கர் அலி 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அடுத்து களம் புகுந்த ஷொரிபுல் இஸ்லாம் பவண்டறி ஒன்றை விளாசினார்.
இந் நிலையில் கடைசி 2 பந்துகளில் பங்களாதேஷின் வெற்றிக்கு ஒரு சிக்ஸ் தேவைப்பட்டது.

ஆனால் தசுன் ஷானக்க அடுத்து இரண்டு பந்துகளையும் சரியான இலக்குகளில் வீசி லெக் பை ஒன்றையும் ஒரு ஓட்டத்தையும் மாத்திரம் கொடுத்து இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பினுர பெர்னாண்டோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Post a Comment

Previous Post Next Post