பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் பலர் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக (09) மதியம் தமன்னா, யோகிபாபு, மற்றும் புகழ் ஆகியோர் வந்திறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (09) ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர், பாடகர் ஹரிஹரன் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த இசை நிகழ்வில் கலந்துகொள்ள தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, மைனா – நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேவேளை , யாழ்ப்பாணம் வந்த நடிகை தமன்னா தன்னை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என தனது உதவியாளர்கள் மூலம் கோரிக்கை விடுத்து , மிக வேகமாக வாகனத்தில் ஏறி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
இசை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் , தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை சந்தித்து , புகைப்படம் எடுப்பதற்கு 30 ஆயிரம் ரூபாய் நுழைவு சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு, வந்தமை விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில் , தமன்னா விமான நிலையத்தில் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கோரியமை அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி...
தினகரன்
Post a Comment