மாத்தறை கலை விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்...!



இலங்கை மற்றும் சர்வதேச நடைமுறை கலை – இசையை மையப்படுத்திய கலை விழா (MFA) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (02) ஆரம்பமானது.

பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான கலாச்சார சமூகத்தின் ஒத்துழைப்புடன் கலை அமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த கலை விழா பெப்ரவரி 02 முதல் 04 வரை மாத்தறை கோட்டையில் நடைபெறுகிறது.

காலி சாகித்திய விழாவின் பின்னர், வருடத்தின் ஆரம்பத்தில் மாத்தறையின் தென் கரையோரப் பகுதிகளில் கலை விழா நடத்தப்படுவது இலங்கையருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் கிடைக்கும் தனித்துவமான அனுபவமாகும். இதன்போது கலை, ஆக்கம், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்கள், சமூக சந்தைகள் உள்ளிட்ட பல கலாச்சார அம்சங்கள் இங்கு இடம்பெறும்.

UNESCO அமைப்பினால் மாத்தறை கோட்டை, மாத்தறை நகரம் மற்றும் அதன் பாரம்பரிய கலை அம்சங்கள் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பை வழங்குவதோடு, அதனூடாக ஏனைய பிரதேசங்கள் மற்றும் வௌிநாடுகளுடன் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும் உதவுகின்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் குடும்ப உறுப்பினர்களான ஜயந்தி சமரவீர, சஞ்சல குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜகத் வீரசிங்க உள்ளிட்டோரின் மாத்தறை Freedom Hub அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் முக்கிய நிகழ்ச்சியானது, கலைஞரும் தொல்லியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஜகத் வீரசிங்க மற்றும் இசைக்கலைஞரும் கல்வியாளருமான கலாநிதி சுமுதி சுரவீர ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.

பிரதீப் சந்திரசிறி, பிரியந்தி அனுஷா, பீரி ரஹ்மான், ஹேமா ஷிரோனி, மாத்தறை பால பொதுப்பிட்டிய மற்றும் அனுர கிரிஷாந்த உட்பட 12 கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினால் முன்வைக்கப்படும் மற்றும் பேராசிரியர் ஜகத் வீரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் மாத்தறையைச் சேர்ந்த 8 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மேலதிக சமூகக் கலை நிகழ்ச்சியும் இதில் உள்ளடங்கும்.

பெப்ரவரி 04 சுதந்திர தினத்தன்று, மஹிந்த விஜேசேகர விளையாட்டரங்கில் 7 வகையான நிகழ்ச்சிகளுடன் வெளிப்புற இசை நிகழ்ச்சியும் இந்தக் கலை விழாவுடன் இணைந்த வகையில் நடைபெறவுள்ளது. அமில சந்துருவனின் நாட்டுப்புற இசை, பிரேசில் பாடகர் போலாவினால் ஜேஸ் போசா நோவா (Jazz to bossa nova) மற்றும் ரெக்கே (reggae) இசை, பஹதரட்ட பெர இசை மற்றும் ஜேஸ் பெர இசைக் குழுவான Baliphoincs குழுவின் நிகழ்ச்சி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ரெப் (Rap) சஹாகர்னாடிக் (Carnatic) பாடகர் ரோலக்ஸ் ரசத்தி மற்றும் பல கலைஞர்கள் இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

டிக்கட் விநியோகிக்கப்படும் இசை நிகழ்ச்சியைத் தவிர, மாத்தறை கலை விழாவின் ஏனைய அனைத்து நிகழ்ச்சிகளையும் இலவசமாக கண்டுகளிக்கலாம். கலை விழாவைக் காண வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஜனாதிபதி ஈடுபட்டார். மாத்தறை கலை விழாவில் பங்கேற்றதன் பின்னர், நில்வலா கங்கைக்கு அருகில் உள்ள பூங்காவின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாத்தறை அபிவிருத்தித் திட்டத்தையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணா கொடிதுவக்கு, நிபுன ரணவக்க, முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்சீவ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி...
தினகரன்

Post a Comment

Previous Post Next Post