இலங்கை அணியின் தலைமையில் மாற்றம்?



இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்ய உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி T20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 வயதான வனிந்து ஹசரங்க 2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார். அவர் தற்போது வரை 58 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ICC T20 பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கடந்த காலத்தில் முதலிடத்தில் இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03வது இடத்தில் உள்ளார்.

2021 இல், தசுன் ஷானக இலங்கையின் ODI மற்றும் T20 அணித்தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் 2023 ODI உலகக் கோப்பையின் போது காயம் காரணமாக, அவரை நீக்கிவிட்டு தற்காலிகமாக குசல் மெண்டிஸை அணித்தலைவராக நியமிக்க தேர்வுக் குழு முடிவு செய்தது.

எவ்வாறாயினும், ODI தலைவர் பதவி தொடர்பில் புதிய தெரிவுக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்ட் அணித் தலைவர் பதவியை திமுத் கருணாரத்னவுக்கே வழங்க புதிய தேர்வுக் குழுவும் செயல்பட்டு வருகிறது.

உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post