இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான ஆடை மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்பதாக சவூதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் தெரிவித்தார்.
சவூதி அரேபிய அரசாங்கம் பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் பைசல் எப் அலிப்ராகீம் சுட்டிக்காட்டியதோடு அதில் இலங்கைக்கு முக்கிய இடம் வழங்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியா உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிராந்திய விவகாரங்கள் தொடர்பாகவும் அமைச்சருடன் கலந்துரையாடினார்.
மேலும், இலங்கையின் சுற்றுலா மற்றும் விவசாயத் துறைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அத்துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
Post a Comment