கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று முன்தினம் (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.
முதலீட்டு ஊக்குவிப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிலத்தை செயற்திறனுடன் பயன்படுத்துவது தொடர்பான 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
ஒவ்வொரு அரச நிறுவனங்களாலும் திணைக்களங்களாலும் பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவை விரைவாகக் கண்டறிந்து அடையாளம் காணப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தரவு வங்கியொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அடையாளம் காணப்பட்ட காணிகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாக பயனுள்ள முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி பயிரிடக்கூடிய வயல்நிலங்களில் மீண்டும் பயிரிடவும் ஏனைய வயல் நிலங்களில் ஏனைய பயிர்களை விளைவிக்கக்கூடிய வகையில் அது தொடர்பான சட்டங்களை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment