இந்தூர் ஆடுகளம் மோசமானது - ஐசிசி அறிவிப்பு...!


இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இரண்டரை நாட்களுக்குள் முடிவடைந்த டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட இந்தூர் ஆடுகளம் மோசமானது என ஐசிசி அறிவித்துள்ளது.

அப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தூர் ஹோல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக 197 ஓட்டங்களை அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்றிருந்தது.

12 மணித்தியாலங்கள், 50 நிமிடங்களில் நிறைவுபெற்ற அப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 31 விக்கெட்களில் 26 விக்கெட்கள் சுழல்பந்துவீச்சாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. 4 விக்கெட்களே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமானது. ஒருவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 109 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும் பெற்றது. அவுஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந் நிலையில் அப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானது என ஐசிசிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் போட்டி பொது மத்தியஸ்தர் க்றிஸ் ப்றோட் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆடுகளத்துக்கு 3 தகுதிநீக்கப் புள்ளிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

அப் போட்டி துடுப்பாட்டத்துக்கும் பந்துவீச்சுக்கும் இடையில் சம அளவில் மோதிக்கொள்ளப்படவில்லை என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள க்றிஸ் ப்றோட், ஆரம்பத்திலிருந்தே சுழல்பந்துவீச்சு ஆதிக்கம் வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தகுதிநீக்கப் புள்ளிகளை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு 14 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



இது இவ்வாறிருக்க, 5 வருட காலப்பகுதிக்குள் ஏதேனும் ஒரு ஆடுகளத்திற்கு 5 தகுதிநீக்க (அபராதம்) புள்ளிகள் வழங்கப்பட்டால் அந்த ஆடுகள மைதானத்திற்கு ஒரு வருட சர்வதேச போட்டித் தடை விதிக்கப்படும்.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களின் ஆடுகளங்களின் தன்மை சராசரி என பொது மத்தியஸ்தர் அண்டி பைக்ரொவ்ட் அறிவித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் பூனேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மோசமானது என ஐசிசி அறிவித்திருந்தது. அப்போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்ததுடன் பொது மத்தியஸ்தராக க்றிஸ் ப்றோட்தான் செயல்பட்டிருந்தார்.

இது இவ்வாறிருக்க, 'இந்த (இந்தூர்) ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு பொருத்தமானதல்ல என ஐசிசி முத்திரை குத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது' 2ஆம் நாள் ஆட்டம் தொடர்பான செய்தி அறிக்கையில் வீரகேசரி குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் 'ஐசிசி மத்தியஸ்தர்கள் இந்த ஆடுகளம் தொடர்பாக என்ன தீர்ப்பு வழங்குவார்கள்? என்ன கருத்தை வெளியிடுவார்கள்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' எனவும் அந்த செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில், போட்டி முடிவில் ஆடுகளம் மோசமானது என ஐசிசி போட்டி பொது மத்தியஸ்தர் க்றிஸ் ப்றோட் தனது அறிக்கையில் குறிப்பிட்டு 3 தகுதிநீக்க புள்ளிகளை அபராதமாக விதித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post