மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதாக வழங்கிய வாக்குறுதியை வாபஸ் பெற்றது மின்சார சபை…!


மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சார சபை நேற்று (02) உயர் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியிருந்தது.

எனினும், அந்த வாக்குறுதியை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலாகும் வகையில், குறித்த உறுதிமொழியை திரும்பப் பெறுவதாக காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், மனு மீதான இன்றைய பரிசீலனை நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

பிரதிவாதிகள் தரப்பினரால் உயர் நீதிமன்றத்திற்கு நேற்று வழங்கப்பட்ட உறுதிமொழியை முடிவுறுத்துவதாக இருந்தால், க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமையை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை நிராகரித்து, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 07 ஆம் திகதி பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த காலங்களில் செயற்றிறனற்று செயற்படுவது தாம் இராஜினாமா செய்வதற்கான காரணம் என அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குள் குண்டர்கள் சிலர் நுழைந்து தமக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அந்த சம்பவம் இடம்பெற்ற மறுதினம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அதனை நியாயப்படுத்தியமை போன்ற விடயங்கள் அவர்களின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல் தான் நினைத்தவாறு தனியாக தீர்மானம் எடுத்து, அதனை அறிக்கையாக வௌியிட்டமையும் இராஜினாமாவிற்கான காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி…
News 1st

Post a Comment

Previous Post Next Post