ஜனாதிபதியின் திடீர் பயணம்!

 

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் "சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றி கொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒருசுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்..

அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர தினவிழா பெருமையுடன் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்ததாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ள செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்வது அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவ நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்தார்.அங்கு ஜனாதிபதிக்கு வர்த்தகர்களின் அமோகவரவேற்பும் கிடைத்தது.

ஜனாதிபதியொருவர் தமது வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்து, பிரச்சினைகளை ஆராய்ந்தது இதுவே முதல் தடவை என்றும், அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ஹிக்கடுவ நகரில் கூடியிருந்த மக்களின் விபரங்களையும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

Post a Comment

Previous Post Next Post