கத்தார் கால்பந்து தொடரில் நேற்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில். இன்று முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
ரசிகர்களின் பேராதரவோடு விறு விறுப்பாக நடைபெற்று வரும் கத்தார் கால்பந்து தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.
ஓவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் வீதம் 8 பிரிவுகளில் 32 அணிகள் இந்த கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றன. முதலில் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த 16 அணிகள் காலிறுதிக்கு முந்தை போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.
இன்று முதல் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடைபெறும். அதாவது போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்த வெளியேறும். வெற்றி பெற்ற அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் இன்று (03.12.2022) தொடங்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் வருகிற 7.12.2022 வரை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஒரு போட்டியும், நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு போட்டியென நாள்தோறும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் எந்த அணி எந்த அணியுடன் களம்காண காத்திருக்கிறது என்பதை விரிவாக காணலாம்.
இன்று (03.12.2022) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அமெரிக்க அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
நாளை (04.12.2022) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், பிரான்ஸ் போலந்து அணியை எதிர் கொள்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், இங்கிலாந்து செனகல் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
திங்கள் (05.12.2022) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜப்பான் அணி குரோசியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரேசில் தென் கொரியா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
செவ்வாய் (06.12.2022) இரவு 8.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்பெயின் மொராக்கோ அணியுடன் மோதுகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் போர்ச்சுகல் சுவிட்சர்லாந்து அணியுடன் களம்காண்கிறது.
இதுவரை நடந்த போட்டிகள் எப்படியோ... ஆனால், இனிமேல் நடைபெற உள்ள போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும் மிகவும் சவாலாக இருக்கும், ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களின் ஆவலை பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கலாம்.
Post a Comment