இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு சாதகமான முடிவு கிடைக்கக்கூடும் என்ற நிலை 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் காணப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (29) ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இமாம் உல் ஹக் 45 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் நௌமான் அலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதன் பிரகாரம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க நியூஸிலாந்தை விட 97 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணித்தியாலத்தில் விக்கெட் விழாமல் தடுப்பதைக் குறியாகக் கொண்டு பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முனைவதால் அவ்வணி இயல்பாகவே நெருக்கடியை எதிர்கொள்ளும்.
இதேவேளை, வியாழக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 612 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.
அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அணியின் முதலாவது இன்னிங்ஸை டிக்ளயார் செய்வதாக அறிவித்தார்.
தனது இன்னிங்ஸை 105 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த வில்லியம்சன், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 5ஆவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அத்துடன் 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் பெற்ற 25ஆவது சதம் இதுவாகும்.
395 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன், 7ஆவது விக்கெட்டில் இஷ் சோதியுடன் 159 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தார். இஷ் சோதி 65 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.
இவர்களைவிட நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம் 113 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 92 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அஸாம் 161 ஓட்டங்களையும் அகா சல்மான் 103 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் அஹ்மத் 86 ஓட்டங்களையும் பெற்றனர்.
Post a Comment