புது டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக நீங்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது காற்றின் மாசுபாட்டின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இலங்கையில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டது.
இதன்போது, ஏற்படும் விஷவாயுவை சுவாசிப்பதால் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என்பதால், மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வைத்திய நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
விவசாயிகள் அறுவடை செய்த பிறகு வைக்கோல் போன்ற எச்சங்களை எரிப்பதன் காரணமாக இந்தியாவின் தலைநகரான புது டில்லி அருகே காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கொளுத்துவதன் மூலம் வெளியாகும் கார்பன் டைஒக்சைட், நைட்ரஜன் டைஒக்சைட், சல்பர் டைஒக்சைட் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்வதன் மூலம் இந்த நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
Post a Comment