அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, தனி நீதிபதி விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றப் பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண் மற்றும் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் வழக்கின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற விதிகள் வகுக்கப்பட்டதாகவும், அதன்படி வழக்கின் கட்டணம் 25 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்த சசிகலாவின் வழக்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரிக்க உகந்த வழக்கு அல்ல என்றும், இரு நீதிபதிகள் முன்பாக மட்டுமே விசாரிக்க முடியும் என தெரிவித்தனர்.
ஆனால் சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, நீதிமன்ற பதிவுத் துறையில் சரிபார்த்த பின் தான் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதனால் தனி நீதிபதியே விசாரிக்கலாம் என வாதிட்டார். இதையடுத்து சசிகலா தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு உகந்ததா என்கிற மனு மீதான உத்தரவை நீதிபதி எஸ்.சௌந்தர் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Post a Comment