உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் இன்று (13) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் போஷாக்கு நிலையை உறுதிப்படுத்துவதில் துல்லியமான தரவுகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் கிடைக்கும் தரவுகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு, தேசிய மட்டம் முதல் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் வரை அனைவரினதும் பங்களிப்பு அவசியமானது என வலியுறுத்திய ஜனாதிபதி, அரச துறையினர் மாத்திரமன்றி தனியார் துறையினருக்கும் இதில் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,
தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் மிகவும் முக்கியமானது. நாட்டில் உணவுப் பாதுகாப்போடு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதற்கு அரச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களினால் நாட்டின் விவசாயம் சில பின்னடைவுகளை சந்தித்ததாகவும், ஆனால் எதிர்வரும் பெரும்போகத்தை விவசாயிகள் வலுவாக எதிர்கொள்ளக்கூடிய பின்னணி நாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான அரிசியை முழுமையாக இந்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு இன்று விவசாயிகள் பலமாக இருப்பதாகவும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கஞ்சன விஜேசேகர, அலி சப்ரி, நசீர் அஹமட், கெஹலிய ரம்புக்வெல்ல, விஜயதாச ராஜபக்ஷ, நளின் பெர்னாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, சனத் நிஷாந்த, மொஹான் சில்வா, பிரமித பண்டார தென்னகோன், ஜகத் புஷ்பகுமார, அனுராத ஜயரத்ன, காதர் மஸ்தான், ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, நிமல் லன்சா, வஜிர அபேவர்தன, தயாசிறி ஜயசேகர, ஜகத் குமார, ரஞ்சித் பண்டார, எம்.ஏ.சுமந்திரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, உணவுக் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நன்றி...
தினகரன்
Post a Comment