சீனாவில் கொவிட் மரணங்கள் அதிகரிப்பு; மின் சுடலைகளில் நெருக்கடி..!


சீனாவில் நேற்று புதிய கொவிட் மரணங்கள் பற்றி அறிவிக்கப்படாதபோதும் மின்சுடலைகள் அதிகரிக்கும் சடலங்களின் எண்ணிக்கையைச் சமாளிக்கச் சிரமப்படுகின்றன.

தலைநகர் பீஜிங்கில் உள்ள மின் சுடலை ஒன்றுக்கு வெளியில் சடலங்களை ஏற்றிய பல டஜன் வாகனங்கள் வரிசையில் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா தனது கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையிலேயே அங்கு வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. மருத்துவமனைகள் புதிய படுக்கைகள் மற்றும் அவரச சிகிச்சை பிரிவுகளை நிறுவி வருகின்றன. அடுத்த ஆண்டு சீனா ஒரு மில்லியன் கொவிட் உயிரிழப்பை எதிர்கொள்ளக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை பீஜிங்கின் டங்சூ மாவட்ட மின் சுடலைக்கு வெளியில் சடலங்களை ஏற்றிய சுமார் 40 வாகனங்கள் காத்திருப்பதாகவும் வாகனத் தரிப்பிடமும் முழுமையாக நிரம்பி இருப்பதாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சோங்சிங் நகரில் உள்ள மின்சுடலை, சடலங்களை வைத்திருக்க இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் அங்கு கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை முன்பைவிடப் பல மடங்கு அதிகம் என்றும் அவற்றை வைப்பதற்குப் போதுமான குளிர் சாதன வசதி இல்லை என்றும் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post