உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்...!!


மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது.

இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின் 5-வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வெளியேற்றியது.

இதன் மூலம் வரும் டிசம்பர் 18ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே மகுடத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

முன்னதாக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருந்தது, மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post