அதிக சீனர்கள் வெளிநாடு செல்ல ஆர்வம்...!



சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சீனக் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரைகின்றனர்.

சீனாவிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணங்களுக்கான முன்பதிவுகள் அதிகரித்துள்ளன. அறிவிப்பு வந்தவுடன் 30 நிமிடங்களில் பயண இணையத்தளத்தில் பிரபலச் சுற்றுலாத் தலங்களுக்கான இணையத் தேடல்கள் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பயண முகவர் தளமான கியுனரில் விமானச் சேவைகளுக்கான கோரிக்கைகள் 7 மடங்கு அதிகரித்துள்ளன.

வெளிநாடு செல்ல விரும்பும் சீனர்களுக்கான விசா அனுமதியும் மீண்டும் வழங்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டினருக்கு விசா வழங்கும் திட்டத்தைச் சீனா இன்னும் ஆரம்பிக்கவில்லை.



வெளிநாட்டிலிருந்து வருவோர் 5 நாள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனும் விதிமுறையைத் தளர்த்துவதாக சீனா இந்த வார ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.

எனினும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அந்நாட்டு பயணிகளுக்கு பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. சீன நாட்டவர்களின் பிரதான பயணத் தளமான ஜப்பான், சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொவிட் இல்லை என்பதை உறுதி செய்யும் சோதனை முடிவை காட்ட வேண்டும் அல்லது ஏழு நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்னர் 2019இல் சீனாவில் இருந்து வெளியெறிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 155 மில்லியனாக இருந்த நிலையில் 2020இல் அது 20 மில்லியனாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தற்போது ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்றே அதிகமாகப் பரவி வருகிறது. அது டெல்டா வகை தொற்றைப் போல் தீவிர பாதிப்பு கொண்டதாக இல்லாததால் கட்டுப்பாட்டு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் தினசரி பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதையும் சீன தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post