கடந்த சில வாரங்களாகவே போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ சமூகவலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டுமொருமுறை `டாக் ஆஃப் தி டௌன்’-ஆக மாறியுள்ளார் ரொனால்டோ.
37 வயதாகும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போர்ச்சுகல் - சுவிட்ஸர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பென்ச்-சில் அமரவைக்கப்பட்டிருந்தார். இம்முடிவை அவரது கோச் ஃபெர்னாண்டோ சாண்டோஸ் எடுத்திருந்தார். உலகக்கோப்பை போட்டியில் முதன்முறையாக பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார் ரொனால்டோ.
இந்த ஆட்டத்தின்போது, போர்ச்சுகல் அணி கோல் மழை பொழிந்து சுவிட்ஸர்லாந்தை பந்தாடியது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் 17வது நிமிடம் , 33வது நிமிடம் , 51வது நிமிடம் , 55வது நிமிடம் , 67 வது நிமிடம் , 92வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர்கள் கோல் அடித்தனர். குறிப்பாக ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கோன்கலோ ராமோஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தினார். இவர், சர்வதேசப்போட்டிகளில் வெறும் 33 நிமிடங்கள் மட்டுமே விளையாடி இருக்கிறார் இதுவரையென தரவுகள் சொல்கின்றன. இவரது நேற்றைய அசாத்திய ஆட்டத்தினால், 6க்கு 1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் கம்பீரமாக காலடி வைத்தது.
இப்படியான சூழலில் ரொனால்டோ இந்த ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்படாமல் இருந்தது, நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது ரொனால்டோவின் காதலி ஜியோர்ஜினாவின் இன்ஸ்டா பதிவு. இவர் ஸ்டேடியத்தில் இருந்துகொண்டு போர்ச்சுகல் அணியின் மேலாளரை டேக் செய்து போட்ட அந்த போஸ்ட்-ல் அவர் கூறியது இதுதான் - `வாழ்த்துகள் போர்ச்சுகல்… அணியில் 11 வீரர்கள் கீதம் பாடியபோது, அனைவரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. இப்படியொரு போட்டியை, உலகின் சிறந்த வீரரை 90 நிமிடங்கள் அனுபவிக்க முடியாமல் ஆக்கியுள்ளனர். மிகப்பெரிய அவமானம் இது!
ரசிகர்கள், நிறுத்தாமல் இதுபற்றி கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தனர். இருக்கட்டும். கடவுளும், உங்கள் நண்பர் ஃபெர்னாண்டோவும் கைகோர்த்துக்கொண்டு, இன்னொரு இரவிலும் இதேபோல எங்களுக்கு அதிர்வலைகளை கொடுக்கட்டும்”. இக்கருத்து பல தரப்பினராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதுவொருபுறமிருக்க, ரொனால்டோவின் ரசிகர்கள் நேற்றைய ஆட்டத்தின்போது மைதானத்தில் அவர் பெயரை சத்தமாக உச்சரித்துக்கொண்டே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 4 – 1 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி முன்னிலையில் இருந்தபோது லிசைல் ஸ்டேடியத்தின் மொத்த கூட்டமும் `ரொனால்டோ… ரொனால்டோ…’ என சத்தமாக கத்தி அவரை உள்ளே நுழைய கத்தியது. இதற்கு சில நிமிடங்களுக்குப் பின்னரும், குறிப்பாக 5 கோல்களை போர்ச்சுகல் அணி அடித்த பின்னரே ரொனால்டோ உள்ளே இறக்கப்பட்டார். அதுவும் மஞ்சள் நிற உடையில் சப்ஸ்டியூட்டாகவே இறக்கப்பட்டார்.
இதனால் இறுதியில் அவரால் கோல் எதுவும் அடிக்கமுடியவில்லை. ஒரேயொருமுறை அவர் கோல் அடித்தபோதும், அது ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது. இதன்பின் 6 -1 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றியை ருசித்தது. இருந்தபோதிலும் ரொனால்டோ முகத்தில் எந்தவித கொண்டாட்டமும் இல்லை. தனது அதிருப்தியை முகத்தில் வெளிப்படுத்தியைப் பார்க்க முடிந்தது. வெற்றிக்கொண்டாட்டத்திலும் அவர் பெரிதாக ஈடுபடவில்லை.
முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது. அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை தெரிவித்தார். இதனால் கூட இந்த ஒரு போட்டியில் அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.
வரும் 10ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ, போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் ரொனால்டோ இறக்கப்படுவாரா, இல்லை அதிலும் பென்ச்சில் அமர வைக்கப்படுவாரா என்பது இதுவரை தெரியவில்லை. இந்தப் போட்டியில் அவருக்கு மாற்றாக இறக்கப்பட்ட வீரர், மிகச்சிறப்பாக விளையாடியதால் `அணிக்கு ரொனால்டோ தேவையில்லையோ’ என்ற எண்ணம் அவரது கோச்-க்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கோச் ஃபெர்னால்டோவுக்கும் ரொனால்டோவுக்கும் மோதல் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இனி வரும் ஆட்டங்களில் ரொனால்டோ முதலில் களமிறக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ரொனால்டோ இதுகுறித்து நேற்று போட்ட பதிவில், “போர்ச்சுகலுக்கு நம்பமுடியாத நாள் இது. மிகப்பெரிய உலகக் கால்பந்து போட்டியில் வரலாற்று முடிவு கிடைத்துள்ளது. திறமை மற்றும் இளைஞர்கள் நிறைந்த குழுவினர், ஆடம்பர கண்காட்சியாக இன்று இருந்தது. போர்ச்சுகலுக்கு வலிமை சேரட்டும்!” என்று கூறியுள்ளார். இதுவும் தற்போது வைராலாகி வருகிறது.
இனி வரும் ஆட்டங்களில் ரொனால்டோ விளையாடுவாரா என்பதற்கு, காலமே பதில் சொல்லனும்! பார்ப்போம் அதையும்!
Post a Comment