ரத்தன் டாடாவின் பயோபிக் படம் குறித்து பரவி வந்த தகவலுக்கு, இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்திருந்தப் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகமல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தநிலையில், சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில், இந்தப் படம் 5 தேசிய விருதுகளைப் பெற்று அசத்தியது. இந்தப் படம் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா, அடுத்ததாக பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களாக தகவல் பரவி வந்தது.
இதற்கிடையில், ‘கே.ஜி.எஃப்.’, ‘காந்தாரா’ படங்களை இயக்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் கார்த்திக் கௌடா, ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், சுதா கொங்கராவின் இரண்டு ஸ்கிரிப்ட்டுகளையும் பார்த்து வருவதாகவும், அவை இரண்டுமே தமிழ் படங்களாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர், அந்தப் படங்கள் பயோபிக் படங்கள் இல்லை என்றும், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தழுவி உருவாக்கப்படும் படங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்கும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை. எனினும் எனது அடுத்தப் படத்திற்காக ஆர்வம் காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
I’m a huge admirer of Mr. Ratan Tata. However I have no intention of making his biopic at this moment . But thank you all for your interest in my next film! Soon! 😊
— Sudha Kongara (@Sudha_Kongara) December 3, 2022
Post a Comment