கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 7,500 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் கடலலை ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் எனக் கூறப்படுகிறது.
உலகத்தில் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக இயங்குவதாக கடல் அலை இருக்கிறது. இதன் இயக்கத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர் அப்துஸ் சமத் மாணவர்களுடன் இணைந்து கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் சிந்துஜா 1 என்கிற மின்மாற்றியை கண்டறிந்துள்ளனர். இந்தச் சாதனத்தின் சோதனைகள் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
தூத்துக்குடி கடற்கரையிலிருந்து 6 கிமீ தொலைவில் 20 மீட்டர் ஆழம் கொண்ட இடத்தில் சாதனம் நிறுத்தப்பட்டு மின்சார உற்பத்தி தொடர்பான சோதனை நடைபெற்றது. அதில் மின்சார உற்பத்தி தொடர்ச்சியாக கிடைத்ததாகவும், கடல் அலையினால் மின்சார உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் சென்னை ஐஐடியின் கடல் அலை ஆற்றல் மூலத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில், கடலின் மேற்பகுதியில் மிதக்கும் மிதவைகளும் அதன் மூலம் இணைக்கப்பட்ட செங்குத்து வடிவ மின் ஆக்கியும் கடல் அலை ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.
(கம்பி போன்ற அமைப்பு கடலின் அடி ஆழத்தில் இருக்கும் இதற்கு மேல் தான் மின்சாரம் உற்பத்தி செய்ய பகுதி இருக்கிறது. கடல் அலையின் ஏற்ற இறக்கத்தை பொருத்து மின்சாரத்தின் உற்பத்தியும் அமைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்)
கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேல் எவ்வளவு ஆழத்திலும் இந்த மிதவை மின்மாற்றியை பொருத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் சூரிய மின் ஆற்றல், காற்றாலை போல அல்லாமல் 24 மணி நேரமும் கடல் அலை மூலம் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதால் பேட்டரி அமைப்புகளின் தேவை மிகவும் குறைவாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடல் அலை மின்னாக்கியின் அமைப்பு,
கடலில் ஏற்படும் சீற்றங்கள் சீதோஷண நிலையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மிதந்து வேறு பகுதிக்கு செல்லாத வகையிலும் அடிப்பகுதி வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, மின்சாரத்தை பெறுதல், சாதனத்தின் செயல்பாடு, அமைவிடம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கணினி மூலம் முழுமையாக கண்காணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
7,500 கிலோமீட்டர் கடற்கரை நீளம் கொண்ட இந்தியாவில் கடல் அலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் இந்த சாதனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 2050க்குள் 500 ஜிகா வாட் என்கிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை எட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக கன்னியாகுமரி, கடலூர், விசாகப்பட்டினம், கேரளா, குஜராத் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கடல் அலை மின் ஆக்கிகளை பொருத்துவதற்கும், சோதனை செய்வதற்கும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காலநிலை பாதிப்பை குறைப்பதற்கும் வருங்கால மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் இந்த கண்டுபிடிப்பு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment