வங்கியில் ரூ.30 கோடி கடன்... மீண்டும் தொடங்கும் நடிகர் சங்க கட்டிட பணி…!

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் ரூ.30 கோடி கடன் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நவீன வசதிகளுடன்புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-ல் கட்டுமான பணிகளை தொடங்கினர். திரையரங்கம், திருமண மண்டபம், நடிகர் சங்க அலுவலகங்கள், உடற்பயிற்சி கூடம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை அமைக்கப்பட்டு வந்தன.

70 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் 2019-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை கோர்ட்டு நிறுத்தி வைத்ததால் கட்டுமான பணிகள் முடங்கியது. பின்னர் தடை நீங்கி கடந்த மார்ச் மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டு நாசர் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதும் மீண்டும் நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முயற்சி எடுத்தனர். ஆனாலும் தேவையான நிதி இருப்பு இல்லாததால் உடனடியாக பணிகளை தொடங்க முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வங்கியில் ரூ.30 கோடி கடன் கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர். ஓரிரு வாரங்களில் கடன் கிடைக்கும் என்றும், இதன் மூலம் கட்டிட பணிகளை ஜனவரி இறுதியில் தொடங்கி 6 மாதத்தில் முடித்து திறப்புவிழா நடத்தப்படும் என்றும் நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post