மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டது.
இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.
அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. எனினும் இம்முறை எந்தவோர் அரசியல் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அணிகளை அமைக்க அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன.
இம்முறை அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்), மொஹைதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பெரிக்கத்தான் நேசனல்), இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்துள்ள அம்னோ கட்சி இடம்பெற்றிருக்கும் தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்), முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான ஜிடிஏ ஆகிய நான்கு கூட்டணிகள் தேர்தல் களம் கண்டன.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கும், மகாதீர் தரப்புக்கும் சாதகமாக அமையவில்லை. நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 2018ஆம் ஆண்டு, 14ஆவது பொதுத்தேர்தல் வரை நாட்டை வழிநடத்திய தேசிய முன்னணி (பாரிசான்), இம்முறை முப்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மறுபக்கம் மகாதீர் தமது தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், அவரது கூட்டணியும் படுதோல்வி கண்டது.
இதனால் பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் இப்ராகிமும், மொஹைதின் யாசினும் மட்டுமே இருந்தனர். அன்வார் தரப்பு 82 இடங்களில் வென்றுள்ளது. மொஹைதின் கூட்டணி 73 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இரு தலைவர்களும் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை, ரகசிய ஆலோசனை எனப் பலவிதமாக முயன்றும் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையை எட்ட முடியவில்லை.
இதற்காக காலக்கெடு விதித்திருந்தார் மலேசிய மாமன்னர். எனினும் அவர் அளித்த காலக்கெடு முடிக்கு வந்த பிறகும் இரு தலைவர்களால் ஆட்சியமைக்க தேவைப்படும் எம்பிக்களின் ஆதரவு உள்ளதை மாமன்னரிடம் உறுதி செய்ய முடியவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் நலன் கருதி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஐக்கிய (ஒற்றுமை UNITY) அரசாங்கத்தை அமைக்கலாம் என மாமன்னர் தமது பரிந்துரையை முன்வைத்தார். இது தொடர்பாக அன்வார், மொஹைதின் ஆகிய இருவரையும் அரண்மனைக்கு வரவழைத்து கலந்தாலோசித்தார்.
எனினும் அன்வார் தரப்புடன் இணைந்து செயல்பட இயலாது என அந்தச் சந்திப்பின்போதே உறுதிபடத் தெரிவித்தார் மொஹைதின் யாசின். மேலும், மாமன்னரை சந்தித்த பின்னர் அரண்மனைக்கு வெளியே குவிந்திருந்த செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்வார், ஐக்கிய (ஒற்றுமை) அரசாங்கத்தை அமைக்க தமது கூட்டணி தயாராக உள்ளதாகவும், நாட்டின் நலனுக்காக அனைத்துத் தரப்பினருடனும் ஒத்துழைக்க தயார் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே தேசிய முன்னணி (பாரிசான்) தலைவர்களும் மாமன்னரை சந்தித்தனர். அதன் பின்னர் திடீர்த் திருப்பமாக தேசிய முன்னணி நேற்றி நள்ளிரவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
"ஐக்கிய (ஒற்றுமை) அரசாங்கத்தை ஆதரிக்கத் தயார். எனினும், அந்த அரசாங்கத்துக்கு மொஹைதின் யாசினின் தேசிய கூட்டணி தலைமையேற்கக் கூடாது. மேலும் புதிய அரசாங்கத்தில் பங்கேற்குமாறு மாமன்னர் அறிவுறுத்தியுள்ளார். அதையும் ஏற்கிறோம்," என்பதே தேசிய முன்னணியின் அறிவிப்பாகும்.
இதன் மூலம் மொஹைதின் யாசினுக்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியது தேசிய முன்னணி.
இதையடுத்து ஐக்கிய (ஒற்றுமை) அரசாங்கத்துக்கு அன்வார் இப்ராகிம்தான் தலைமையேற்பார் என்றும் அவருக்கு தேசிய முன்னணியின் மறைமுக ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது என்றும் அன்வாரின் ஆதரவாளர்கள் நேற்றிரவு முதலே பேசத்தொடங்கிவிட்டனர். இன்று காலை அன்வாரை ஆதரிக்கும் தலைவர்கள் சிலர், நாட்டின் அடுத்த பிரதமராக அவர் பொறுப்பேற்பது உறுதி என சமூக ஊடகப் பதிவுகளில் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
தமது நீண்ட அரசியல் பயணத்தில் பல்வேறு கடும் போராட்டங்களை எதிர்கொண்டவர் அன்வார் இப்ராகிம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவர்.
மகாதீர் ஆட்சிக்காலத்தில் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வார், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டார். மகாதீருக்குப் பிறகு அன்வார்தான் பிரதமர் என்று உறுதியாக நம்பப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட புகார்கள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார் அன்வார். அவர் மீது பிரதமராக இருந்த மகாதீரே நேரடியாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதன் பிறகு அன்வாரின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது. எனினும் சிறையில் இருந்தபடியே ´மறுமலர்ச்சி´ (Reformasi) என்ற முழக்கத்தை முன்வைத்து தனது அரசியல் பயணத்தை புதிதாகத் தொடங்கினார் அன்வார். அவரது மனைவி வான் அசிஸா நேரடியாகக் களமிங்கி, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அன்வார் ஆதரவாளர்களின் துணையோடு புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவே செயல்பட்டு வந்த பிறகு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார் அன்வார்.
தமக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால், நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்று தொடர்ந்து கூறி வந்தார் அன்வார். அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
Post a Comment