கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொலன்னறுவை- வெலிகந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் கைதிகள் பலர் தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்வதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்திருந்தனர்.
தப்பிச் சென்றிருந்த வெலிகந்த, திருகோணமலை தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு இருந்தார். இருப்பினும் குறித்த நபர் உணவின்றி பல நாட்கள் இருந்தமையால் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மாற்றப்பட்ட ஒருவராவர். குறித்த நபர் ரத்வத்த, கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment