டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
டி20 உலக கோப்பை பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 153 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 5 பந்து எஞ்சி இருந்த நிலையில் 153 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இதில் 2009-ல் கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி 3 முறை அரை இறுதியில் (2010, 2012, 2021) தோற்று இருந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர் கொள்கிறது.
ஆனால், பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையே முன்னாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் எதிர்நோக்கி உள்ளனர்.
அதுமட்டுமன்றி பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர். 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார்.
இதே போல பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மேத்தீவ் ஹைடன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சளரான சோயப் அக்தரும் இந்தியவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.
எனவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.
Post a Comment