ட்விட்டரின் ஒட்டுமொத்த நிர்வாக குழுவும் நீக்கம்-எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வகிக்க திட்டம்?



ட்விட்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவையும் நீக்கிவிட்டு, எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் நிர்வாகத்திலும், ஊழியர்கள் மத்தியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனம் தனது கட்டுப்பாடுக்கு வந்த உடனே அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி விஜயா கட்டே உள்ளிட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க்.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவையும் நீக்கிவிட்டு, எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களின் பணி திறன் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்த பின் புதிய இயக்குனர்கள் குழு அமைக்கப்படும் எனத் தெரிகிறது.



முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் 75 சதவிகித ஊழியர்களை அதாவது 7,500 பேர் பணியாற்றும் நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதுகுறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது 'இது உண்மை அல்ல' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இயக்குநர்கள் குழுவையும் நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ட்விட்டர் தளத்தில் புதிதாக கொண்டுவரப்படும் வெரிபிகேஷன் சேவை உள்ளிட்ட புதிய வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post