நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் சியோ கந்தா (Chiyo Kanda) மற்றும் சிரேஷ்ட மூலோபாய மற்றும் செயற்பாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுக்குழுவினருக்கு விளக்கிய பிரதமர், புதிய சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான நிதி ஏற்பாடுகளை முன்கூட்டியே முடிவுசெய்ய வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நிலைமையை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த உலக வங்கியின் பணிப்பாளர், இடைக்கால மற்றும் நீண்ட கால முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாகவும் உறுதியளித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் மூலம் விரைவில் நிறைவேற்றப்படும் நிதி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புதிய சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
வருமானத்தினை அதிகரிக்கும் கொள்கைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, எரிசக்தியின் சந்தை விலை நிர்ணயம் மற்றும் நட்டத்தில் இயங்ககும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை உட்பட பெரும்பாலான முன் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன அல்லது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்ட பிரதமர், இக்கட்டான சூழ்நிலையிலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தி ஆகிய துறைகளிலும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறது என்று தெரிவித்தார்.
நான்கு வருட காலப்பகுதியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதிய உதவித் திட்டம் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதிநிதிகள் குழு குறிப்பிட்டது.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான மூலோபாயம் மற்றும் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் இளங்கோ பச்சமுத்து, சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி அசேல திஸாநாயக்க மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் எம். குணரத்ன ஆகியோரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
Post a Comment