டெல்லி காற்று மாசின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக காற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசை குறைக்க, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லியை பொறுத்தவரை, இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அளவு 406 என உள்ளது. இதனால் டெல்லி, காற்று மாசு அளவீடுகளில் 'கடுமையான' பிரிவில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோல காற்றின் தரக் குறியீடு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 'கடுமையான' பிரிவில் (அங்கும் 406) உள்ளது என்றும், அரியானா மாநிலம் குருகிராமில் (346 என்ற அளவுடன்) 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது என்றும், மற்றும் 350 என்ற அளவுடன் டெல்லி விமான நிலைய பகுதியில் 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த டெல்லியின் காற்றின் தரக் குறியீட்டு 354 அளவில் மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளது காற்று மாசு கட்டுபாட்டு வாரியம்.
இதை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட உள்ள நோட்டீஸ் தொடர்பாக பேசியுள்ள தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், `டெல்லியில் அபாயகரமான அளவு மாசு இருப்பதால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரிய நிலையில் உள்ளது. இதுகுறித்து டெல்லி மாநில அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வழியில், விளையாட்டு மைதானங்களில் நச்சுக் காற்று குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு அலட்சியமாக உள்ளது. எனவே இது குறித்து நோட்டீஸ் அனுப்பவுள்ளோம்’ என தெரிவித்துள்ளது.
Post a Comment