முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் குழப்பமும் பரபரப்பும்…!



முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இம்மாதம் 07ஆம் திகதி புத்தளத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு கட்சியின் ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையும், ஆதரவாளர்களிடையேயும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சர்வதிகாரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் அன்றைய தினம் பேராளர் மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே நின்ற கட்சியின் ஆதரவாளர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் நசீர் அஹமட்டின் ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் பேராளர் மாநாட்டை குழப்புதற்கு வருகை தந்தவர்கள் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் தெரிவித்தனர்.

எவ்வாறயாயினும் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடுகளின்போது ரவூப் ஹக்கீம் சர்வதிகாரியாக நடந்து கொண்டிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை கட்சியின் ஆதரவளர்களும், உயர்பீட உறுப்பினர்களும் முன்வைப்பது வழக்கமாகும்.

ஆயினும், பேராளர் மாநாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் குறித்து எநதவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எவ்வளவோ அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. அவை பற்றி பேசவில்லை.

கொரோனா தொற்றால் மரணித்த ஜனாஸாக்களை எரித்ததன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென்று ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ரணில் விக்கிரமசிங்க மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் நடைபெற வேண்டுமென்று உரத்துப் பேசிக் கொண்டிருக்கம் ரவூப் ஹக்கீம் ஜனாஸா எரிப்புக்கு ஆணைக்குழு நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்திருப்பது முரண்பாடாகவே இருக்கின்றது.

இதனை விடவும் முஸ்லிம் காணிப் பிரச்சினை, முஸ்லிம்களின் மீது நல்லாட்சி அரசாங்கத்திலும், அதற்கு முன்னரும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும்.

உண்மையான தாக்குதல்தாரிகளை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்தை கோரும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. வழக்கமானதொரு அரசியல் கூட்டமாகவே பேராளர் மாநாடு நிறைவடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குள்ளாகி, கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கிய கையுடன் கட்சியின் முக்கிய பதவிகளை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை என்பது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது மட்டுமல்ல முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரானதுமாகும். நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு வழங்கிய அனுமதியாகும். ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக முழு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியமையால்தான் அவர் தனித்து நின்று கொரோனா ஜனாஸாக்களை எரிப்பதற்கும், பொருளதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களை எடுப்பதற்கும் காரணமாகும்.

இத்தகைய எதிர்விளைவுகளை முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டுக்கும் ஏற்படுத்தியமைக்கு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் காரணமாகும். இறுதியாக ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலை ஏற்பட்டின் பின்னரே கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸில் இவ்வாறு கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய சம்பங்கள் பல நடந்துள்ளன.



முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹாரிஸ், பைசால் காசிம், எம்.எஸ்.தௌபீக், நசீர் அஹமட் ஆகியோர்ளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவர்களில் அமைச்சர் நசீர் அஹமட் கட்சயில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏனைய மூன்று போpனதும் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் நடவடிக்கைகள் குறித்து ரவூப் ஹக்கீம் பலத்த கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார். இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்ப வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு கட்சியின் முக்கிய பதவிகள் வழங்கப்படமாட்டாதென்று கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் எண்ணிக் கொண்டனர்.

ஆனால் அவர்களின் எண்ணங்களுக்கு மாற்றமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் எண்ணங்களுக்கு அமைவாக பைசால் காசிம் பொருளாளராகவும், எம்.எஸ்.தௌபீக் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதவிகள் வழங்கக் கூடாதென்று உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கோரிய போதிலும் ரவூப் ஹக்கீம் உயர்பீட உறுப்பினர்களிடம் வலியுறுத்தியே பதவிகளை வழங்கியுள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பேராளர் மாநாட்டுக்கு செல்லவில்லை. ஏனைய 02 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட்டமைக்கு மன்னிப்பு கோhpயதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், ஹரிஸ் மன்னிப்பு கோரவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியமையானது தலைவர் ரவூப் ஹக்கீமின் சம்மதத்தின் பேரிலேயாகும் என்பதே ஹரிஸ், நசீர் அஹமட் ஆகியோர்களின் நிலைப்பாடாகும். கிழக்கு மாகாணத்திற்கு தனியான அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டுமென்ற புதிய சிந்தாந்தத்தை அண்மைக் காலமாக ஹரிஸ் வெளிப்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுன்றி கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அத்தகைய தலைமைத்துவத்தை கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் ஹரிஸ் முன்னெடுத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், கட்சியில் இருந்து ஹரிஸை தூரமாக்கவும், அவரை தனிமைப்படுத்திவிடவும் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட தந்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், தௌபீக் ஆகியோர்களுக்கு மன்னிப்பும், பதவியும் வழங்கியமையாகும்.

ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார். இதனால், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே முரண்பாடான கருத்துக்கள் எதிர்காலத்தில் வருவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் தலைமைக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அவரை தம்மிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்றதொரு நிலைப்பாட்டையும் ரவூப் ஹக்கீம் கொண்டுள்ளார். இதனை பேராளர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் ஊடாக புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை கட்சியின் தலைவருக்கே அதிகாரங்கள் உள்ளன. நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவர் என்று கூறும் அளவுக்கு அதிகாரங்களைக் கொண்டுள்ளார். கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் அரைவாசிக்கு அதிகமானவர்களை நியமிக்கவும் அவருக்கு அதிகாரங்கள் உள்ளன.



இதனால், உயர்பீடத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் யாவும் தலைவர் ரவூப் ஹக்கீமின் விருப்பத்திற்கு அமைவாகவே இருந்து வருக்கின்றன. அதனால், முஸ்லிம் காங்கிரஸில் யார் எந்தப் பதவியைப் பெற்றுக் கொண்டாலும் அந்த பதவிகளினால் தலைவரை கட்டுப்படுத்தவோ, அதிகாரம் செலுத்தவோ முடியாது.

இதேவேளை, ரவூப் ஹக்கீமின் தீவிர விசுவாசிகளாக செயற்பட்டவர்களில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் ஆகியோராவார். கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குள்ளாவனர்களை மன்னிப்பு வழங்கி கட்சியில் இணைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு கட்யின் உயர்ந்த பதவிகளும், பாராட்டுக்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கும் முடிவினை தலைமை எடுத்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்சியின் உண்மையான விசுவாசிகள் ஓரங்கட்டுவதற்கான முடிவாகவும், கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயற்பட்டவர்களை கௌரவிக்கும் போது உண்மையாக விசுவாசிகளுக்கு பெறுமதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எப்படி இருந்திட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு குழப்பங்களுக்கு மத்தியில் பரபரப்புடன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் திட்டமிடலுக்கும், அரசியல் நகர்வுகளுக்கும் ஏற்றவாறு நடைபெற்று முடிந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post