நாளை மறுதினம் நடக்கவுள்ள பாகிஸ்தான் - பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து மற்றும் இந்தியா - ஜிம்பாப்வே போட்டிகளின் முடிவைப் பொறுத்தே 'குரூப் 2' பிரிவில் எந்த இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது தெரியவரும்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தங்களது அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவில் 'குரூப் 1' மற்றும் 'குரூப் 2' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் 'குரூப் 2' பிரிவில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இடத்திலும் உள்ளது. 'சூப்பர் 12' சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது வரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் 'குரூப் 2' பிரிவில் வரும் 6-ஆம் தேதி இதற்கு முடிவு எட்டப்படவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியையும், இந்திய அணி ஜிம்பாப்வேயையும் வரும் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்த மூன்று ஆட்டங்களும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.
அன்று நடக்கும் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். அன்றைய நாளின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணி வங்காள தேசத்தை வென்றாலும், ஜிம்பாப்வே அணியை இந்தியா வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி வெளியேறி விடும். அதேநேரம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை இந்தியா அந்த ஆட்டத்தில் தோற்று, பாகிஸ்தான் கடைசி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வென்று, தென் ஆப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தை வீழ்த்தினால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் புள்ளிகள் சமநிலைக்கு வரும். பின்னர் நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவு செய்யப்படும்.
வங்காளதேசம் அணியை பொறுத்தவரையில் அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும். இதுபோக, நெதா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்றாலோ அல்லது ஆட்டம் கைவிடப்பட்டு அந்த அணிக்கு 1 புள்ளி கிடைத்தாலோ, வங்காளதேசம் அரையிறுதி வாய்ப்பு பெறும்.
'குரூப் 2' பிரிவில் கடைசி இரு இடங்களில் உள்ள ஜிம்பாப்வே, நெதா்லாந்து அணிகளுக்கு எந்த விதத்திலும் அரையிறுதி வாய்ப்பு இல்லை.
Post a Comment