ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் மிரட்டலாக வெளியாகியுள்ளது.
‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது. 23.7 கோடி அமெரிக்க டாலர்களில் உருவான இந்தப் படம், சுமார் 284.72 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி, திரைப்பட வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது.
இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். சுமார் 5 பாகங்களாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியநிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்தவகையில், 13 வருடங்களுக்குப் பிறகு ‘அவதார் 2’ திரைப்படம் வருகிற டிசம்பர் 16-ம் தேதி, டால்பி பிரீமியம் 4k உடன், 3D தொழில்நுட்பத்தில், உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து படத்திற்கான டீசர் மற்றும் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ (Avatar: The Way of Water) என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை லைட்ஸ்டோர்ம் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. 20-த் செஞ்சுரி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.
அதில் தண்ணீர், இயற்கை என மீண்டும் ‘பண்டோரா (Pandora regions)’ இடத்திற்கு திரும்பியுள்ளதை குறிக்கும் வகையில் மிகவும் மிரட்டலாக கடலுக்கு அடியில் நடக்கும் சம்பவங்கள் ட்ரெய்லரில் உள்ளது. மேலும், ஜேக் சல்லி (sam worthington) மற்றும் நெய்திரியின் (zoe saldana) காதலுடன் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகமான இதில் நெய்திரி கருவுற்றிருப்பதாக ட்ரெய்லர் துவங்குகிறது. பின்னர், ஜேக் சல்லி மற்றும் நெய்திரியின் மகள் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார். அவரைச் சுற்றி காட்சிகள் நடக்கிறது. நீரின் வழி அனைத்தையும் இணைப்பதாகவும் , தைரியமாக இருக்குமாறும் நெய்திரிக்கு, ஜேக் சல்லி கூறும் வகையில் ட்ரெய்லர் உள்ளது.
Post a Comment