ஐரோப்பியாவில் சில நாடுகள் ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளன.
பணி நேரம் அதிகமாக இருப்பதால், ஊழியர்களின் சிரமத்தை களையும் அதே வேளையில், பணியும் பாதிக்காத வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் சோதனை ஓட்டமாக வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர். இதன் முடிவில் 88 சதவீத நிறுவனங்கள், இத்திட்டம் தங்கள் வணிகத்திற்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. 15 சதவீதம் உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளதாகவும், மற்ற பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தன.
இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரு நிறுவனங்களான Atom வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான Awin ஆகியவையும் 4 நாட்கள் வேலை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன.
இந்த 2 நிறுவனங்களிலும் தலா 450 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதுகுறித்து Awin தலைமை நிர்வாகி ஆடம் ரோஸ் (Adam Ross) கூறுகையில்,
இது நிறுவன வரலாற்றில் நாங்கள் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும். கடந்த 1½ ஆண்டுகளில் ஊழியர்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகப்பெரிய மேம்பாட்டைக் கண்டோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் உறவுகளை தக்கவைத்தல் ஆகியவற்றில் பெரும் பயன்கள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார்.
100 இங்கிலாந்து நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல், நிரந்தரமாக 4 நாட்கள் வேலை திட்டத்தை அமல்படுத்தவுள்ளன.
Post a Comment