”உணவுக்கு இடமில்லை” - சிறுமியின் வயிற்றுக்குள் 3 கிலோ தலைமுடி.. இது என்ன புதுவித வியாதி?


உலகில் சிலருக்கு விசித்திரமான சில பழக்கங்கள் இருக்கும். இதில் சிலவற்றை மருத்துவரீதியாக டிஸார்டர் என்கின்றனர். இதுபோன்ற ஒரு விசித்திர பழக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஒரு சிறுமி. 

கடந்த சில ஆண்டுகளாக முடியை மென்று மென்று சாப்பிட்டதில் தற்போது வயிற்றுக்குள் 3 கிலோ முடி பந்தே உருவாகிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளது தெற்கு சீனா மார்னிங் போஸ்ட். அதுமட்டுமல்லாமல் தனது தலைமுடியையே பிய்த்து சாப்பிட்டதில் கிட்டத்தட்ட அந்த சிறுமியின் தலையே வழுக்கையாகி விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியூரில் வசித்து வந்ததால் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உணவு சாப்பிட முடியாமல் சிரமப்படவே, சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்ததில் வயிறு மற்றும் குடல்களுக்குள் ஒரு செங்கல் எடையளவுக்கு முடி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமி, அழுக்கு, பேப்பர், களிமண் மற்றும் பிற உண்ணக்கூடாத பொருட்களை சாப்பிடும் Pica என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அறுவைசிகிச்சைக்கு பிறகு, மருத்துவர்கள் வெற்றிகரமாக முடியை அகற்றியுள்ளனர்.



இதுகுறித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்த ஜியான் டாக்சிங் மருத்துவமனையைச் சேர்ந்த இரப்பை மற்றும் குடல் நிபுணர் ஷி ஹாய் கூறுகையில், “சிறுமியால் சாப்பிட முடியாத நிலைமையில் எங்களிடத்தில் அழைத்து வரப்பட்டாள். பின்னர் அவருடைய வயிறு தலைமுடியால் அடைக்கப்பட்டிருந்ததை பரிசோதனையில் கண்டறிந்தோம். அவருடைய வயிற்றில் உணவு செல்ல இடமில்லாத அளவுக்கு குடல்கள் கூட அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் வசித்துவருகிறார். அவர்கள் சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை பெரிதாக கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. பல ஆண்டுகளாக சிறுமி மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, குழந்தைகளை விட்டு தள்ளியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் பெற்றோர்கள் குழந்தைகள்மீது கவனம் செலுத்துவது அவசியம்” எனக் கூறியுள்ளார்.



தலைமுடியை சாப்பிடுவது அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை ஏற்கன்வே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 2017ஆம் ஆண்டு, 16 வயது பிரிட்டன் மாணவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணத்தை ஆய்வுசெய்ததில் மாணவனின் வயிற்றுக்குள் தலைமுடி பந்து கட்டியிருந்தது தெரியவந்தது. தங்கள் தலைமுடியை உண்ணும் நோயாளிகள் பொதுவாக Rapunzel syndrome என்ற trichophagia மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பர் என்று விளக்கியுள்ளது US National Institutes of Health.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post