கேன்சர் சிகிச்சையின்போது தனது மூக்கின் பெரும்பகுதியை இழந்த பெண்ணின் கையிலேயே மூக்கை வளரவைத்து அதனை அறுவைசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் பிரான்ஸ் மருத்துவர்கள்.
பிரான்ஸ், டௌலோஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு நாசி குழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயை குணமாக்க அவருக்கு ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதனால் அவர் தனது மூக்கின் பெரும்பகுதியை இழந்தார். பல ஆண்டுகள் மூக்கின் பாதிப்பகுதி இல்லாமல் கடினமான நிலையில் வாழ்ந்துவந்த அந்த பெண், புனரமைப்பு மற்றும் செயற்கை முறையில் உறுப்பை பொருத்துதல் போன்ற பல முயற்சிகளை எடுத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
ஆனால் தற்போதுள்ள டெக்னாலஜிக்கு நன்றி கூறுகிறார் அந்த பெண். காரணம் பெண்ணின் சொந்த கையிலேயே மூக்கை வளர்த்தி அதனை அந்த பெண்ணுக்கே பொருத்தி வெற்றியும் கண்டுள்ளனர் பிரான்ஸ் மருத்துவர்கள். 3டி பிரிண்டிங் பயோமெட்டீரியல் முறைமூலம் மூக்கின் குருத்தெலும்பை உருவாக்கி, அதை பெண்ணின் கையில் பொருத்தி, நெற்றிலியிலிருந்து சிறிது தோல்பகுதியை எடுத்து அதில் வைத்து வளர்த்துள்ளனர். இந்த இணைப்பு மூக்கானது இரண்டு மாதங்கள் பெண்ணின் கையில் வளர்ந்தபிறகு, அதனை முகத்தில் பொருத்தியுள்ளனர்.
டௌலோஸ் பல்கலைக்கழக மருத்துவமனை வளர்க்கப்பட்ட மூக்கு மற்றும் 3 டி பிரிண்டிங் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. மேலும் பெண்ணுக்கு மூக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும், 3 வாரங்களுக்கு ஆண்டிபயாட்டிக்குகளையும் எடுத்துக்கொண்டால் நோயாளி பூரண குணமடைந்துவிடுவார் எனவும் கூறியிருக்கிறது. தொடர்ந்து இதற்குமுன்பு இதுபோன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில்லை எனவும், தற்போது வெற்றிகரமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.
Post a Comment