டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பதம்பார்க்கும் முனைப்பில் தென்ஆப்பிரிக்கா - இன்று பலப்பரீட்சை...!


இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றால் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு முழுமையாக சாத்தப்படும்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் சிட்னியில் தொடங்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 'குரூப் 2' பிரிவில் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 'டென்ஷன்' இல்லாமல் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிடும். முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானையும் வீழ்த்த தயாராக உள்ளது.



பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1 வெற்றி, 2 தோல்வி என்று 2 புள்ளிகளுடன் மோசமான நிலையில் உள்ளது. அந்த அணியை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய இரு ஆட்டங்களில் ஜெயித்தாலும், மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

அதேநேரம், இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அரையிறுதி வாய்ப்புக்கான கதவு முழுமையாக சாத்தப்படும். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3 ஆட்டத்திலும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. அவர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். வானிலையை பொறுத்தவரை சிட்னியில் இன்று மழை பெய்வதற்கு 11 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு குறைவே.

Post a Comment

Previous Post Next Post