நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை நாட்டில் பின்பற்றப்படும் ஒழுக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வமதத் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் முன்மொழிவுகள் குறித்து விளக்கமளித்த போதே சர்வமதத் தலைவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர்.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரவணக்க தலைமையில் அண்மையில் (26) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு, கடன் மறுசீரமைப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், போக்குவரத்து திறன், எரிசக்தி போன்ற துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக துறைசார்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுடன் நடத்திய கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய முதல் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க விளக்கமளித்தார்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய கால தீர்வுகள் அடங்கிய இரண்டாவது அறிக்கையை முன்வைக்க தயாராக இருப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற தேசிய பேரவை தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், உலக வங்கியின் கணக்கெடுப்புக்கு அமைய இந்நாட்டில் உயர்ந்த வருமானம் பெறும் 20% ஆனவர்களில் 12 % ஆனவர்கள் சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதாகவும், நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 20% ஆனவர்களில் 49 % ஆனவர்களுக்கு மாத்திரமே நிவாரணங்கள் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க நிறுவுனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் குழு கவனம் செலுத்தியிருப்பதாகவும், தற்பொழுது காணப்படும் 2200 அரசாங்க நிறுவனங்களுக்கான கொள்கைகளைத் தயாரிப்பது உள்ளிட்ட முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு வரவு செலவுத் திட்டத்தில் பாரியளவிலான பணம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவ்விடயம் தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து வழிகாட்டல் ஒன்று முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அனைத்து மதத் தலைவர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான முன்மொழிவுகள் குறித்துத் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
Post a Comment