அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இன்று(02) பிற்பகல் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தரப்பினருக்குக்கு கடிதமொன்றின் மூலம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N.தில்ருக்கின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தை கையளிப்பதற்காக இன்று(02) அதிகாலை முதல் பொலிஸ் அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தரப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்றிருந்தனர்.
இவ்வாறான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் வினவிய போது பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும் போது வீதிகளை மறிப்பதன் காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், கடமைகளின் பின்னர் வீடு திரும்பும் மக்கள், கோட்டை மற்றும் புறக்கோட்டையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இடையூறுகள் ஏற்படலாம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது வாகன நெரிசல் ஏற்பட முடியும் என்பதன் காரணமாக கட்டுநாயக்க, பியகம, கண்டி மற்றும் வத்துபிட்டிவல பொருளாதார மத்திய நிலையங்களிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களில் பொருட்களை கொண்டுவருவதிலும் பாதிப்புகள் ஏற்படலாம் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது வீதிகள் மறிக்கப்படுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 80ஆவது பிரிவின் கீழ் ஒலிபெருக்கி போன்றவற்றை பயன்படுத்துவதாக இருந்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் அனுமதியை பெற வேண்டும் என்றபோதிலும், இதுவரை அவ்வாறான அனுமதி பெறப்படவில்லை எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதிகளை மறித்தால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் படியும் வேறு சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் பொலிஸாரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி...
News1st
Post a Comment